டெல்லி: ஒரு அழகு ராணி, ஒரு விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் பெரும் தலைவர்களை “வதம் செய்த” நான்கு பெண்கள், "கடவுளிடம் இருந்து சமிக்கை” கிடைத்ததால் போட்டியிட்டவர்; இன்னொருவர் டிவி நெறியாளரிடம் நடுவிரலை காட்டி புகழ் பெற்றவர்; 2019 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு தேர்வான பெண்கள் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் உயிர்த்துடிப்பை இது காட்டுகிறது.

2019 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 724 பெண்களில் 78 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (எம்.பி.), வெற்றி பெற்றுள்ளனர் - இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கை. இந்த பெண்களில் 60% க்கும் அதிகமானோர் அல்லது 47 பேர் முதன்முறை எம்பிக்கள் என, திரிவேதி அரசியல் தரவு மையம் (TCPD) இணை இயக்குனர் கில்லஸ் வெர்னியர்ஸ் தெரிவித்தார். எட்டு முறை வெற்றி பெற்ற மேனகா காந்தி போன்ற சிலரும் இதில் உள்ளனர்.

இவர்களில் மூன்று கோடிஸ்வரர்கள் - மிகப்பெரிய பணக்காரரான பாரதிய ஜனதாவின் (பா.ஜ.க.) ஹேமா மாலினி, ரூ.250 கோடி சொத்துக்களை வைத்துள்ளதாக, ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொள்காட்டும் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் தினக்கூலியான தந்தை, தையல் தொழிலாளியான அம்மாவை கொண்டுள்ள ரம்யா ஹரிதாஸ், எம்.பி. ஆகியிருக்கிறார். சொத்து மதிப்பு, வெறும் ரூ. 22,816 தான்; 32 வயதான இவர், கேரளாவின் இரண்டாவது தலித் பெண் எம்.பி. மற்றும் இம்முறை மாநிலத்தின் ஒரே பெண் எம்.பி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2011இல் திறமையாளர்களுக்கான வேட்டை அடிப்படையில் ஒரு பட்டியலை தயார் செய்தார். இதில், இசை பட்டதாரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்டார்; அத்துடன் பாடல்கள் மற்றும் இசை வடிவில் பிரசாரம் மேற்கோண்டு பார்வையாளர்களை ஈர்த்தார்.

ஹரிடாஸின் அரசியல் போட்டியாளர்கள் ஏளனம் செய்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை நாளன்று, அவர் ஏற்கனவே பதவியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஐ (எம்) பி.கே. பிஜூவை, 52.4% வாக்குகள் பெற்று தோற்கடித்தார்.

ஒரு படி முன்னோக்கி…

சதவீத அடிப்படையில், 2019 பொதுத் தேர்தல்களில் பெண்களுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாயங்கள் சிறியவை: 16ஆவது மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12.1% (66 பெண்கள்) என்பதில் இருந்து 14.6% என்றளவில் மட்டுமே அதிகரித்துள்ளது.

"உடனடியாக மாற்றத்தை கொண்டு வர முடியாது," என, "பெண்ணியவாதிகளின் தீவிர ஆதரவாளர்" என்று தன்னை குறிப்பிடும் சின்டா அனுராதா கூறினார்; இவர் ஆந்திரப்பிரதேச மாநிலம் அமலாபுரத்தில் இருந்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. "பெண்கள் இப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் நீரோட்டத்தில் கலந்து வருகின்றனர் மற்றும் அரசியல் கட்சிகளும் இதை தீவிரமாக எடுத்துக் கொள்கின்றன. இது ஒரு நல்ல தொடக்கமாகும், நாடாளுமன்றத்தில் எங்களது சரியான எண்களை விரைவில் எட்டுவோம்” என்றார்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நான்கு பெண்களும் வெற்றி பெற்றனர்; இவர்களில் இருவரில் முதல் முறையாக அனுராதாவும் ஒருவர்.

இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் முன்பாக ஒடிசாவில் பிஜுஜனதாதளம் கட்சி, மக்களவை தேர்தல் வேட்பாளர்களில் 33% பெண்களுக்கு என்று அறிவித்தது. இத்தேர்தலில் அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட ஏழு பேரில் ஐந்து பெண்கள் வெற்றி பெற்றனர். இதில், பி.டெக். பட்டதாரியான சந்திராணி முர்முவும் ஒருவர்; இவர் வயது, 25 ஆண்டு, எட்டு மாதம், 11 நாட்கள்; இளம் பெண் எம்.பி.ஆன இவர், பி.ஜே.டி.சார்பில் கெயன்ஹர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இருமுறை பா.ஜ.க. எம்.பி.யாக இருந்த அனந்த நாயக்கை 66,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வீழ்த்தினார்.

பா.ஜ.க.வின் இரண்டு பெண் எம்.பி.க்கள் புவனேஷ்வரில் இருந்து அபராஜிதா சாரங்கி மற்றும் பொலங்கிரில் இருந்து சங்கீதா சிங் தியோ ஆகியோருடன் சேர்த்து ஒடிசாவின் மொத்தமுள்ள 21 எம்.பி.க்களில் ஏழு பேர் பெண்கள்; இதன் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவம் 2014 இல் 9.5% என்று இருந்தது, 2019இல் 33.3% ஆக அதிகரித்துள்ளது.

Source: Analysis by BehanBox, an upcoming digital platform for gender issues based on data from TCPD. Note: Does not include Tripura and Meghalaya, where one of two MPs each (50%) is a woman.

ஆனால், மேற்கு வங்கத்தில் இந்த முடிவு தலைகீழாக மாறியது. இங்குதான் தனது வேட்பாளர்களில் 41% தொகுதிகளை (22 இடங்கள்) திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் (TMC) மம்தா பானர்ஜி பெண்களுக்கு ஒதுக்கினார். இருப்பினும், பெண்கள் எம்.பி.க்களின் விகிதம் 2014ஆம் ஆண்டில் 28.6% என்று இருந்தது 26.2% ஆக குறைந்துவிட்டது.

இருந்தாலும், 42 பெண் எம்.பி.க்களில் மேற்கு வங்கம் 12 பெண்களை - 2 பாஜக மற்றும் 10 திரிணமூல் காங்கிரஸ் என - பிரதிநிதித்துவம் கொண்டு ஒரு குறிப்பிடத்தக்க மாநிலமாக உள்ளது; இதில், லண்டனில் இருந்து 2008 இல் நாடு திரும்பி, அரசியலில் சேர்ந்த ஒரு முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், டைம்ஸ் நவ் சேனலில் நெறியாளர் அர்னப் கோஸ்வாமியிடம் நடுவிரலை காட்டி பிரபலமானவருமான மஹூவா மோத்ராவும் அடங்குவார்.

மோத்ரா தனியுரிமை பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்; சமூக ஊடகங்களை கண்காணிக்க வேண்டும் என்ற நரேந்திர மோடி அரசின் முன்மொழிவுக்கு எதிராக, பொது நலன் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

'மக்களவைக்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் அதிகமானவர்கள்' என்பது உற்சாகத்தை ஏற்படுத்திய போதிலும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2019 ஆம் ஆண்டில் ஒரு பெண் வேட்பாளரை கூட தேர்ந்தெடுக்கத் தவறியிருக்கின்றன.

இமாச்சல பிரதேசம், ஜம்மு, காஷ்மீர் மற்றும் கோவா ஆகியந இந்த பூஜ்ஜியம் பெண்கள் எம்.பி. என்ற நிலையில் உள்ளன; யூனியன் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால், தத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு ஆகியனவும் இதில் இடம் பெற்றுள்ளன.

Source: Election Commission of India data on 2019 Lok Sabha results analysed by IndiaSpend.

மிசோரமில், முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெண் போட்டியிட்டு வரலாறு உருவாக்கப்பட்டது. லால்த்லா மவுனி, தாம் சுயேச்சையாக போட்டியிட "கடவுளிடம் இருந்து ஒரு சமிக்கை” கிடைத்தது என்றார். 63 வயதான இவர், சின்லாங் இஸ்ரேல் மக்கள் பேரவை என்ற ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார்; இது, இஸ்ரேலின் 10 பழங்குடியினரில் ஒருவரான மிசோ யூதர்களைக் கொண்டது. வாக்கு எண்ணிக்கை நாளில் அவர் 1,975 அல்லது 0.4% வாக்குகளை பெற்றார்.

அசாமின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ஒரு பெண். ஆனால், கவுகாத்தி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட 17 வேட்பாளர்களில் ஐந்து பெண்கள் சுறுசுறுப்பாக களமிறங்கினர்.

முடிவில், பாஜக சார்பில் போட்டியிட்ட கவுகாத்தி முன்னாள் மேயரான குயின் ஓஜா, தனது நெருங்கிய போட்டியாளரான காங்கிரஸ் கட்சியின் போபீதா சர்மாவை தோற்கடித்தார். இவர், அசாம் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். அசாமில் நடந்த அழகு போட்டியில் வென்றதன் மூலம், சிலர் இப்போட்டியை 'ராணி Vs அழகு ராணி ' என்று தலைப்பிட்டு அழைத்தனர். 5.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஓஜா வெற்றி பெற்றதோடு, 1977 முதல் உள்ள இத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண் என்ற சிறப்பை பெற்றார்.

"இப்போதெல்லாம் பெண்கள் அரசியலைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவ்வளவு சுறுசுறுப்பாக செயலபடுவதில்லை" என்று, தொலைபேசியில் இந்தியாஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் ஓஜா தெரிவித்தார். "அரசியலுக்கு வர, பெண்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவை பெற்றாக வேண்டும். முதலில் அவர்கள் சமுதாயத்திலும் சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டும்" என்றார்.

அருணாச்சல பிரதேசத்திலும் அதன் கண்ணாடி கூரை தகர்க்கப்பட்டுள்ளது; அங்கு ஒரு பெண் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஜார்ஜ் ஈட் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து (மதச்சார்பற்ற) ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், எம்.பி.யாக இருந்தவரும் பா.ஜ.க. அமைச்சருமான கிரன் ரிஜிஜுவால் தோற்கடிக்கப்பட்டார்; எட்டின் பெற்ற 11.95% உடன் ஒப்பிடுகையில் ரிஜிஜு 63.2% வாக்குகளை பெற்றவர்.

மேகாலயாவில் உள்ள இரண்டு இடங்களில், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் பி.ஏ. சங்மாவின் மகளான 38 வயது அகதா சங்மா, தூராவை வீழ்ச்சி வெற்றி பெற்றார். 14வது மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற அவருக்கு இது மூன்றாவது தேர்தல் வெற்றி ஆகும்.

வடகிழக்கு மாநிலங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 2014 தேர்தலில், எட்டு மாநிலங்களில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில், 3 பெண்களே தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

சில வடகிழக்கு மாநிலங்களில், உதாரணமாக மணிப்பூரில் பெண் வேட்பாளர்களே இல்லை. நாகாலாந்து மாநில அவைக்கு (சட்டமன்றம்) ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் ஒரேயொரு பெண் எம்.பி.காலஞ்சென்ற ரெனோ மெசி ஷாய்ஸ்.

இழப்பு பெரியது

பெண்கள் எம்.பி. வேட்பாளர்களில் தோல்வியை சந்தித்த குறிப்பிடத்தக்க வேட்பாளர்களும் உள்ளனர் - ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆதிஷி; கல்வியாளர் மற்றும் ஆர்வலரான இவர், கிழக்கு டில்லி தொகுதியில் 17.44% வாக்குகளைப் பெற்றார். பா.ஜ.க. - காங்கிரஸ் மற்றும் அவரது கட்சிக்கு இடையே நிலவிய மும்முனை போட்டியில், பா.ஜ.க.வின் கவுதம் கம்பீர் (55.35%) மற்றும் காங்கிரஸின் அர்விந்தர் சிங் லவ்லி (24.24% வாக்குகள்) ஆகியோருக்கு அடுத்ததாக அதிஷி மூன்றாவது இடத்தை பெற்றார்.

அசாமின் சில்சார் தொகுதியில் காங்கிரசின் சுஷ்மிதா தேவ், பாஜக வேட்பாளர் ராஜ்ஜீப் ராயிடம், 81,596 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் (சட்டமன்றம்) பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர் நீண்டகால வழக்கறிஞரான தேவ்.

முன்னாள் நடிகையான பாஜகவின் ஜெயப்பிரதா, தனது நெருங்கிய போட்டியாளரான சமாஜ்வாதி கட்சியின் ஆசாம் கானிடம், ராம்பூர் தொகுதியில் லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். காங்கிரஸ் கட்சியின் குமாரி செல்ஜா, ஹரியானா அம்பலாவில், பா.ஜ.க. வேட்பாளர் ரத்தன் லால் கட்டாரியாவால் 3.42 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

மேலும் பல முக்கியமான, வலுவான பெண் வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தனர் - பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தி.மு.க.வின் கனிமொழி கருணாநிதியிடமும்; திரிணமூல் காங்கிரஸின் ரத்னா டி பாஜகவின் லாக்கெட் சாட்டர்ஜியிடம் வெற்றியை பறிகொடுத்தனர்.

குறைந்தபட்சம் 50 தொகுதிகளில், பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களின் முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

அவற்றில் மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் தோல்வியின் விளிம்பானது 10,000 வாக்குகள் குறைவாக இருந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பர்தமான்-துர்காபூரில் டி.எம்.சி.யின் மம்தாஸ் சங்கமிதா 2,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஒடிசாவில் கோராபுட்டில், கவுசியா ஹிக்காசாவின் தோல்வி 3,613 வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தது. மேற்கு வங்கத்தின் மால்தகா தக்ஷினிலும், பாஜகவின் ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி 8,222 வாக்குகளில் தோல்வியடைந்தார்.

வாரிசுகள்

வழக்கம் போல், புதிய பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களில் வாரிசுகளும் இடம் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, புதிய மக்களவை எம்.பி.க்களில் 30% அரசியல் குடும்பங்களை சார்ந்தவர்கள். ஆனால் பெண்கள் வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால் இந்தத் தேர்தலில் 41 சதவிகிதம் பேர் அரசியல் குடும்பத்தை சார்ந்தவர்கள் என், அரசியல் ஆய்வாளர்கள் கில்லஸ் வெர்னியர் மற்றும் கிறிஸ்டோபி ஜெப்ரலோட் தெரிவித்ததாக, மே 27, 2019 அன்று இந்திய எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி ஆகியவற்றால் நிறுத்தப்பட்ட அனைத்து பெண் வேட்பாளர்களுமே வாரிசுதாரர்கள் தான் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் அனைத்து பெண் எம்.பி.க்களுமே அரசியல் வாரிசுகள் தான்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், பதிந்தர் தொகுதியில் வெற்றி பெற்று, ஹேமா மாலினிக்கு பிறகு, 217 கோடி ரூபாய் சொத்துக்களுடன் பணக்கார பெண் எம்.பி.யாக திகழ்கிறார். தற்போதைய முதல்வர் அமீர்ந்தர் சிங்கின் மனைவி பிரீனேத் கவுர், பாட்யரா தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவர், 2014 இல் தோல்வி அடைந்து, இம்முறை 45.17% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் இருந்து வெற்றி பெற்ற பெண்களில் எட்டு பேரும் அரசியல் பரம்பரையை சார்ந்துள்ளனர். உதாரணமாக, என்.சி.பி. தலைவரான சரத்பவரின் மகள் சுப்பிரியா சுலே, அவரது தந்தையின் பழைய தொகுதியில் பாராமதியில் இருந்து எம்.பி. ஆக பாராளுமன்றத்திற்கு மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மகாராஷ்டிரத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண்கள் எம்.பி.க்களில் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் தொடர்பு உடையவர்கள். பூனம் மகாஜன் கொல்லப்பட்ட பா.ஜ.க தலைவர் பிரமோத் மகாஜன் மகள். இவர், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுனில் தத்தின் மகளும், தன்னை எதிர்த்து போட்டியிட்டவருமான பிரியா தத்தை, வடக்கு மும்பை சென்ட்ரல் தொகுதியில் 53.97% வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். பூனம் மகாஜனின் உறவினர் பிரீதம் முண்டே, பிரமோத் மகாஜன் சகோதரியை திருமணம் செய்து கொண்ட கோபிநாத் முண்டின் மகள் ஆவார். பீட் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரீதம் போட்டியிட்டு, தனது உறவினரை விட 50% அதிகமான வாக்குகளைப் பெற்றார்.

அதேநேரம், அனைத்து வாரிசுதாரர்களுமே வெற்றி பெற்றதாக கூற முடியாது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் மனைவியான சமாஜ்வாடி கட்சியின் டிம்பிள் யாதவ், கன்னோஜ் தொகுதியில் 12,353 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் சுப்ரத் பதக்கிடம் தோல்வி கண்டார்.

புதியவர்களால் திருப்புமுனை

அதேபோல், அடிமட்டத் தலைமையினூடாக தங்கள் வழியைத் தழுவிய புதியவர்களும் இங்கு இருக்கிறார்கள். பிரமிளா பிஷோய் (69), 2ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்; இந்தி அல்லது ஆங்கிலம் பேசத் தெரியாது. ஒடிசாவுக்கு வெளியே ஒருபோதும் சென்றதில்லை. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்; அதில் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார்.

எனினும், ஆஸ்கா தொகுதியில் மகளிர் சுய உதவிக்குழுகளை தொடங்கியதில் அவரது வெற்றி இருந்தது. பிஜுஜனதா தளம் (பி.ஜே.டி) கட்சி தலைவர் நவீன் பட்நாயக், 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இந்த தொகுதியில் போட்டியிட அவரை போட்டியிட செய்தார்.

இந்த கட்டுரை மேலும் கூறுவது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, பிஷோய் மகனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், முதலமைச்சர் உங்களது தாயை சந்திக்க விரும்புகிறார். அவரால் 160 கி.மீ. தொலைவில் உள்ள புவனேஷ்வருக்கு வர முடியுமா? என்று கேட்கப்பட்டது. ஆனால் அவரிடம் டாக்ஸி கட்டணத்திற்கு பணம் இல்லை, அதனால் அவர் தயங்கினார். ஒரு சில மணி நேரம் கழித்து, அவரை மாநில தலைநகர் வரை சென்றடைய ஒரு கார் வந்தது; அங்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் தரப்பட்டது.

வாக்குகள் எண்ணப்பட்டபோது, பிஷோய் 54.52% வாக்குகளைப் பெற்றார், அவரது நெருங்கிய போட்டியாளரான பா.ஜ.க.வின் அனிதா சுபாத்ஷர்னியை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

'வதம் செய்த பெண்கள்'

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அமேதி தொகுதியில் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெற்றிபெற்ற பா.ஜ.க. ஸ்மிருதி இரானியை 'மாபெரும் வதம் செய்தவர்' என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறைந்தது மூன்று பேர் உள்ளனர்.

இதில், மகாத்மா காந்தியின் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸை "தேச பக்தர்" (தேசபக்தி) பாராட்டியதால் தீவிர குற்றம் சாட்டப்பட்ட பிராக்யா சிங் தாகூர் மிகவும் பிரபலமானவர். அவரது வார்த்தைகள் பா.ஜ.க தலைமையால் கண்டிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, "என் இதயமும் நானும் அவரை மன்னிக்காது" என்றார். இருப்பினும், வாக்கு எண்ணிக்கை நாளில் போபால் தொகுதியில் போட்டியிட்ட அவர், 61.54 சதவீத வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான திக் விஜய் சிங் 35.63% வாக்குகளே பெற்று, 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

தமிழ்நாட்டில் விருது பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான ஜோதிமணி சென்னிமலை, காங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதில் போட்டியிட்டார். இங்கு அவரை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் எம். தம்பிதுரையை விட 4.2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வீழ்த்தி, கரூரின் முதல் பெண் எம்.பி. என்ற சிறப்பை பெற்றார்.

கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில், முன்னாள் எம்.பி.யும். நடிகருமான காலஞ்சென்ற எம்.எச். அம்பரீஷின் மனைவியான சுமலதாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. சுயேச்சையாக போட்டியிட்டு அவர் வெற்றிவாகை சூடியுள்ளார். இவர், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான குமாரசாமியின் மகனுமான, ஜனதாதளம் (மதச்சார்பற்ற) வேட்பாளர் நிகில் குமாரசாமியை விட 1.25 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

(பண்டாரே, இந்தியாவை எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள் குறித்து அடிக்கடி எழுதி வரும் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.