சோனிபட்: கடந்த 2019 மக்களவை தேர்தலில், பட்டியலின மக்கள் (எஸ்சி) மற்றும் பட்டியலின பழங்குடியினருக்கு (எஸ்.டி) ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களவை தொகுதிகளில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் “நோட்டா”வை தேர்வு செய்துள்ளனர். அதேபோல் பலமுனை போட்டி நிலவிய தொகுதிகளில் நோட்டாவுக்கு வாக்குகள் குறைந்து இருந்ததை, எங்களது பகுப்பாய்வு காட்டியது.

நாடு முழுவதும், நோட்டாவுக்கு 65 லட்சம் வாக்குகளை பதிவு செய்தது - இது அகமதாபாத்தின் மக்கள் தொகையை விட அதிகம் அல்லது 2019 பொதுத் தேர்தலில் வாக்களித்த மொத்த வாக்குகளில் 1.06%. எனினும் இது 2014 இல் நோட்டாவுக்கு பதிவான 1.08% (60 லட்சம்) என்ற எண்ணிக்கையை விட குறைவு. இம்முறை பீகார் தான், அதிக நோட்டா வாக்குகளைப் பெற்றது (2%), அடுத்து ஆந்திரா (1.49%), சத்தீஸ்கர் (1.44%) மற்றும் குஜராத் (1.38%) .

Source: Trivedi Center for Political Data, Ashoka University

மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டிஸ் மக்கள் சங்கத்தின் ரிட் மனுவைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டின் தீர்ப்பில் " நோட்டா - மேலே உள்ள எதுவுமில்லை" என்பதை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்படுத்தி தந்தது. ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதில் அதிக பங்களிப்பை அடைய உதவும் வகையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டின் ரகசியத்தை பேணி, அதே நேரம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தவும் வகையில் நோட்டா ஏற்படுத்தப்பட்டது.

"அரசியல் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மீது ஏராளமான மக்கள் தங்கள் நிராகரிப்பு அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அரசியல் கட்சிகள் உணரும்போது, படிப்படியாக ஒரு முறையான மாற்றம் ஏற்படும். மக்களின் விருபத்திற்கேற்ப, அவர்களின் மன ஓட்டம் புரிந்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசியல் கட்சிகளுக்கு இதன் மூலம் ஏற்படும் என்று, அப்போதைய தலைமை நீதிபதி பி சதாசிவம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அக்டோபர் 29, 2013 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம், ஒரு தொகுதியில் வேறு எந்த வேட்பாளரை விடவும் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகி இருந்தாலும், அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றாவராக அறிவிக்கப்படுவார் என்று அறிவிப்பு வெளியிட்டது.

"இந்த விதிமுறையானது நோட்டா விருப்பத்தை கிட்டத்தட்ட பொருளற்றதாக மாற்றிவிட்டது," என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் நிறுவன அறங்காவலர் ஜகதீப் சோக்கர், 2018 டிசம்பரில் தி இந்து நாளிதழில் கருத்து தெரிவித்திருந்தார். "... ஒரு நோட்டா வாக்கு, தேர்தல் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை இந்த விதி தெளிவுபடுத்தியது. இது வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு நலனுக்கானது. இதன்பின், வேட்பாளர்கள் நோட்டாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர், வாக்காளர்களிடம் நோட்டா என்பது வாக்குகளை வீணாக்குவதாகும் என்று கூறினார்” என்றார்.

2019 தேர்தல் முடிவில் நோட்டாவின் தாக்கத்தைப் பார்க்க, ஒரு தொகுதியில் வென்ற வித்தியாசத்தை நோட்டா வாக்கு சதவீதத்துடன் ஒப்பிட்டோம். 543 தொகுதிகளில் இருபத்தி ஆறில், வெற்றி விகிதத்தை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகளைப் பெற்றன. அதாவது, நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள், அத்தொகுதியில் இரண்டாவதாக வந்தவரை தேர்வு செய்திருந்தால், அவர் போட்டியில் வென்றிருப்பார்.

நோட்டா "மக்களின் பரந்த பங்களிப்புக்கு" உதவும் என்று உச்ச நீதிமன்றம் தனது 2013 தீர்ப்பில் கூறியது. இருப்பினும், தேர்தல் தகவல்கள் அத்தகைய தொடர்புகளைக் காட்டவில்லை: அதிக நோட்டா வாக்குப் பங்கைக் கொண்ட முதல் 10 தொகுதிகளில் மூன்று, தேசிய சராசரியை விட அதிகமான வாக்குப்பதிவைப் பதிவு செய்துள்ளன.

"எனவே நோட்டா என்பது, ஒரு பல் இல்லாத கருவியாக இருந்தது" என்று, பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளரும், ஏ.டி.ஆரின் நிறுவன அறங்காவலருமான அஜித் ரானடே, புனே மிரர் இதழில் டிசம்பர் 2018 இல் எழுதினார். "வாக்கு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் என்பது அதிருப்தியின் வாக்கு; அதற்கு பற்கள் இருக்க வேண்டும்" என்றார். இதற்கு உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கு பொருந்தும் என்ற மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவை, அவர் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார். இந்த உத்தரவின் கீழ், ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் புதிய தேர்தலை நடத்த வேண்டும்.

தனித் தொகுதிகளில் பதிவான அதிக நோட்டா வாக்குகள்

2019 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் பொது தொகுதிகளை விட சராசரியாக, தனித்தொகுதிகளில் தான் அதிகளவு நோட்டா வாக்குகள் பதிவாகி இருந்தன: அனைத்து எஸ்.டி இடங்களிலும் 1.76% வாக்காளர்கள் மற்றும் எஸ்சி தொகுதிகளில் 1.16% பேர், , பொது தொகுதிகளில் 0.98%.நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

இது முந்தைய தேர்தல்களுடன் ஒத்துப் போகிறது. தரவுகள் பகுப்பாய்வு இணையதளமான பேக்ட்லி.இன் (Factly.in), ஜூன் 2019 பகுப்பாய்வு, 43 வெவ்வேறு தேர்தல்கள் மற்றும் 6,298 தொகுதிகளில் (மக்களவை மற்றும் சட்டமன்றம்), இது 2013 இல் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கள ஆய்வு நடத்தியது.

Source: Trivedi Center for Political Data, Ashoka University

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மற்றும் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் ஆகிய தொகுதிகளில் கிடைத்த புள்ளிவிவர சான்றுகள், எஸ்டி வேட்பாளர்களுக்கு எதிராக நோட்டாவுக்கு ஆதரவான இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வாக்குகளை அணி திரட்டுவதை பரிந்துரைப்பதாக, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வார இதழின் ஆகஸ்ட் 2018 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பஸ்தரில், எஸ்.டி வேட்பாளர்களுக்கு எதிராக ஓபிசிக்கள் பிட்சா வர்க் கல்யாண் மன்ச் (அதாவது, பின்தங்கிய வகுப்பு நல முன்னணி) அமைத்தனர்; பழங்குடி சமூகங்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்தியதால், அவர்களுக்கு நியாயமற்ற உரிமைகள் கிடைத்ததாக இவர்கள் குற்றம்சாட்டினர்.

இடதுசாரி தீவிரவாதம் கொண்ட பகுதிகளில் அதிக நோட்டா வாக்குகள்

நோட்டா என்ற முறை வந்த பின், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சராசரியாக நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிக நோட்டா வாக்குப் பங்கைக் கண்டதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.

2019 ஆம் ஆண்டில் அதிக நோட்டா வாக்குகளைப் பெற்ற முதல் 10 தொகுதிகளில், ஆறு இடங்கள் இடதுசாரி தொடர்பான வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன என்று எங்கள் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இதில் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் அடங்கும், அங்கு 4.56% வாக்குகள் நோட்டாவுக்காக இருந்தன - கோபால்கஞ்சிற்கு அடுத்தபடியாக 5.04% நோட்டா வாக்குகளைப் பதிவு செய்தது.

பாசிம் சம்பரன் (4.51%), ஜமுய் (4.16%), நபரங்பூர் (3.85%), நவாடா (3.73%) மற்றும் கோராபுட் (3.38%) ஆகியவையும் அதிக நோட்டா வாக்குப்பதிவு விகிதத்தை கண்டுள்ளன.

Source: Trivedi Center for Political Data, Ashoka University

மாநில வாரியான தரவுகளும் இந்த போக்கை ஆதரிக்கின்றன: இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகியவை அனைத்தும் நோட்டா வாக்குப் பங்கின் அதிக விகிதத்தைக் கண்டன.

நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக நோட்டா வாக்குப் பங்கு, அரசு இயந்திரங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வழிமுறையாக நோட்டாவைப் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது.

அக்டோபர் 2013 டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அறிக்கையின்படி, சட்டவிரோத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), 2013 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக “சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என்ற தங்களின் அழைப்புக்கு” நோட்டாவை பயன்படுத்திக் கொண்டது. நோட்டாவுடன் வாக்காளர்களை அறிமுகப்படுத்தவும், "அரசின் அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு கருவியாக, கிளர்ச்சியாளர்கள் பஸ்தாரில் போலி ஈ.வி.எம் உடன் நோட்டாவுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி முகாம் நடத்தினர்" என்று கூறப்பட்டுள்ளது.

இரு முனை போட்டியுள்ள தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்கு

தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லது அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டி நிலவிய தொகுதிகளில் மாநிலங்கள், மூன்றாவது மாற்று இருந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக நோட்டா வாக்குப் பங்கைக் கண்டன, எங்கள் 2019 தேர்தல் தரவுகளின் பகுப்பாய்வு காட்டப்பட்டுள்ளது.

பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டியைக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தில், நோட்டா வாக்குகள் 1.38% கொண்டிருந்தன. பாஜக-ஜனதா தளம் (ஐக்கிய) கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு இடையே இருமுனை போட்டி நிலவிய பீகாரில், நோட்டா வாக்குகள் 2% பதிவாகி இருந்தது.

இதேபோல், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் யுவஜன ஸ்ராமிகா ரிது காங்கிரஸ் ஆகிய இரு பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டியைக் கண்ட ஆந்திராவில், 1.49% நோட்டா வாக்குகள் பதிவாகி இருந்தன.

மும்முனை போட்டி கண்ட உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி முறையே 0.84% மற்றும் 0.53% நோட்டா வாக்குகள் பதிவாகின. ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது மாற்றாக டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக இருந்தன.

(பன்சால் மற்றும் மராத்தே ஆகியோர் அசோகா பல்கலைக்கழக மாணவர்கள்).

Donate to IndiaSpend

Support IndiaSpend’s award-winning investigative journalism.

Your tax-deductible contribution to IndiaSpend will help us, and other publications around the country, reveal critical stories that otherwise wouldn’t be told - stories that make a difference!