திருவனந்தபுரம், பதினம்திட்டா, ஆலப்புழை மற்றும் எர்ணாகுளம் (கேரளா): மத்திய கேரளாவின் செங்கனூர் தாலுகாவில் உள்ள கலிச்சேரியில் உள்ள நீலினா மற்றும் செரியன் ஜக்காரியாவின் வீடு, 2018 ஆகஸ்ட் வெள்ளத்தின் போது, அக்கம்பக்கத்தவர்களுக்கு புகலிட முகாமாக இருந்தது. நிவாரணப் பணிகளுக்கான முகாமாகவும் செயல்பட்டது.

”அதிர்ஷ்டவசமாக எங்கள் வீடு சேதமடையவில்லை” என்று கூறும் செரியன், 20 ஆண்டுகளாக குவைத்தில் வேலை பார்த்துவிட்டு, 2014ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பியவர்.

ஆனால், அண்மை வெள்ளம், செங்கனூரை மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டது. 2018 ஆகஸ்ட் மாதம், ஏழு வகையான வெள்ள பாதிப்பில் ஆறில் கடும் விளைவுகளை சந்தித்த மோசமான பகுதியாக செங்கனூர் இருந்தது. அதன் துணை மின்நிலையம் முற்றிலுமாக முடங்கியது.

தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டஜன் கணக்கிலான தன்னார்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தர, சர்க்காரியா கடுமையாக போராடினார். ”மின்சாரம் இல்லாதது பெரும் பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக சமைக்க, கழிப்பறை பயன்படுத்த சிரமமாக இருந்தது” என்றார் நீலினா.

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவால், மாநிலத்தில் 2.56 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால், இப்பிரச்சனையை கேரள மாநில மின்வாரியம் -கே.எஸ்.இ.பி. (KSEB) மனிதவளத்தை திறமையாக கையாண்டு, மின்சார வினியோகத்தை 15 நாட்களில் சீராக்கியுள்ளது. இதற்காக சிவப்பு நாடா முறையில் இருந்து தள்ளி நின்று, ஓய்வுபெற்ற மின்வாரிய பணியாளர்கள், பொறியியல் மாணவர்கள், தனியார் எலக்ட்ரீஷியன்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி, பேரிடர்களை சந்திக்கும் மாநிலங்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.

இத்திட்டத்திற்கு கே.எஸ்.இ.பி. ‘மிஷன் ரீகனெக்ட்’ என்று பெயர் வைத்திருந்தது.

“நிலைமை கணிக்க முடியாதபடி இருந்தது” என்று, கே.எஸ்.இ.பி. தலைவரும், நிர்வாக இயக்குனருமான என்.எஸ்.பிள்ளை இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “வழக்கமாக ஏற்படும் அரசு நடைமுறை தாமதங்கள் நேரிடாமல் களப்பணிக்கு தேவையான பொருட்கள், பணியாளர்கள் பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம்” என்றார்.

வெள்ளத்திற்கு பின் கேரளா எப்படி தன்னை மறுசீரமைத்து கொண்டது என்ற தொடரின் முதல் பாகத்தில், ஏழைப் பெண்களின் நிலைமையை விவரித்துள்ளோம். இதன் இரண்டாம் பாகத்தில், ஏறத்தாழ ரூ.850 கோடி இழப்பை சந்தித்துள்ள கே.எஸ்.இ.பி. சிக்கலை எவ்வாறு கையாள்கிறது என்பதை பார்க்கப் போகிறோம். வெள்ளத்தால், 16,158 மின்மாற்றிகள், 50 துணை நிலையங்கள், 15 பெரிய மற்றும் சிறிய நீர்மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டது, கே.எஸ்.இ.பி. புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கே.எஸ்.இ.பி. தனது லட்சியத்தை எட்ட மேற்கொண்ட பணிகளை நேரில் கண்டறிய இந்தியா ஸ்பெண்ட் குழு ஆலப்புழா, பதினம் திட்டா, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு சென்றது.

நீந்துதல், சகதியில் செல்லுதல், படகு சவாரி என பணியிடத்தை அடைந்த ஊழியர்கள்

கே.எஸ்.இ.பி. மாநில அளவிலான பணிக்குழுவை (SLTF) திருவனந்தபுரத்தில் அமைத்து, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையையும் திறந்தது. ”மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெறுவது, அளிப்பது எங்களது பிரதான பணியாக இருந்தது” என்று பணிக்குழுவை சேர்ந்த துணை தலைமை பொறியாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

இதில் சவாலானது அனைத்து மட்டங்களிலும் --அதாவது தலைநகரில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் -- மனிதவளம் மற்றும் பொருட்கள் கிடைப்பது மற்றும் குழுவின் பல்வேறு பிரிவுகள், வெளி முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது ஆகும்.

மின் வினியோகத்தை சீரமைக்க ஆட்களும், பொருட்களும் தாமதமின்றி கிடைப்பதில் கவனம் செலுத்தினோம்: கே.எஸ்.இ.பி. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.பிள்ளை.

இப்பணியின் வெற்றி என்னவெனில், மீட்புக்குழு பணியாளர்கள், தொண்டர்கள் சிதைந்த வீடுகளையும் மூழ்கிய கிராமங்களையும் சரியாக போய் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதில் இருந்தது.

”நான் விரைவில் பணி ஓய்வு பெறப்போகிறேன். எனது பணிக்காலத்தில் இதுபோன்ற ஒன்றை கண்டதில்லை” என்று, செங்கனூர் கே.எஸ்.இ.பி. பிரிவு அலுவலக துணை பொறியாளர் மணி குட்டன் தெரிவித்தார்.

அன்று அவருக்கு பணி விடுப்பு நாளாக இருந்த போதும், வெள்ளை துண்டு (வேட்டி), பழுப்பு சட்டையை அணிந்து கொண்டு மீட்புப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 55 வயது ஆனபோதும் தலைமுடிக்கு பழுப்பு பூசி வயதை பொருட்படுத்தாமல் களமிறங்கினார்.

2018, ஆக. 15ஆம் தேதிக்கு பின் மூன்று நாட்கள், பால்க்காரரின் படகில் தன் வீட்டில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்கு பயணித்தார். ”வெள்ளத்தால் என் வீடு பாதிக்காத போதும் தண்ணீரில் நீந்தியே வெளியே செல்ல வேண்டியிருந்தது” என்று கூறும் அவர், “பல்வேறு பகுதிகளிலும் மின்வினியோகம் சீராகும் வரை, நாங்கள் சில நாட்கள் மின்வாரிய அலுவலகத்திலேயே தங்கியிருந்தோம்” என்றார்.

சேவை இணைப்பை மீளச்செய்த நிலை

Source: Kerala State Electricity Board (As of September 3, 2018)

ஹரிபாட் வட்டாரத்தின் ஒருபகுதியின் திட்ட மேலாண்மைப்பிரிவு (PMU) உதவி நிர்வாகக்குழு பொறியாளராக ஷியாம் குமார் இருந்தார். அவரது மூத்த அதிகாரிகள் வீடுகள் அல்லது நிவாரண முகாம்களில் சிக்கிக் கொள்ள, இவரோ சக பணியாளர்களின் உதவியோடு, மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு தேவையான பொருட்களை, 1,20,000 பேரிடம் போய் சேர்த்தார். “அத்தகைய நெருக்கடியான சூழலில் நாங்கள் பொறுப்பினை எடுத்துக் கொண்டோம்” என்றார் ஷியாம் குமார்.

திறமையான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்தொடர்பை உறுதிப்படுத்துவதற்காக, ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் என ஏழு கண்காணிப்பு அலுவலரை அமைக்க முடிவெடுத்தோம். அவர்களுக்கு தெரியாமல் உள்ளூர் மின் இணைப்பை தரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் துணை மின்நிலையங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு சேவைகள் மீண்டும் தொடங்கின.

ஒவ்வொரு 11கி.வா. துணைமின் நிலைய பகுதிகளுக்கு ரோந்து சென்ற மின்வாரிய எலக்ட்ரீஷியன் மற்றும் ஊழியர்கள், நிலைமையை உடனுக்குடன் கண்காணிப்பு அலுவலருக்கு தெரியப்படுத்தி, தேவையான பொருட்களை தெரிவிப்பார்கள். அவர்கள், கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் அளித்து அவற்றை உடனே அனுப்பி வைப்பார்கள்.

களப்பணியில் ஓய்வுபெற்ற வயர்மேன்கள், எலக்ட்ரீஷியன்கள்,மாணவர்கள்

பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஓய்வுபெற்ற வயர்மேன், எலக்ட்ரீஷியன்கள் தன்னார்வலர்களாக களமிறங்கி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று, மின் இணைப்பு, ஒயர்கள் நிலையை பரிசோதித்தனர். ”ஓணம் பண்டிகை வேறு நெருங்கிவிட்டதால், அதற்குள் பணிகளை முடித்துவிட தீர்மானித்தோம்” என்ற குமார், ”மற்ற வட்டாரங்களில் இருந்து வயர்கள், மின்சாதனங்கள், மின் மாற்றிகள் உள்ளிட்டவை இங்கு கொண்டு வரப்படுவதை நாங்கள் உறுதி செய்தோம்” என்றார்.

”சீரமைப்பு பணியின் போது செங்கனூரில் உள்ள மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், குடிநீரேற்று நிலையங்கள், தொலைத்தொடர்பு துறை உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டது.

செங்கன்னூர் மின்வாரிய துணை அலுவலகத்தில் உதவி நிர்வாக பொறியாளரான லைலா என்ஜி, ஆகஸ்ட் 22, 2018 அன்று தான் பணியில் சேர முடியும் என்ற சூழல் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட அக்கம்பக்கத்தினருக்கு அவரது வீடு புகலிடமாக இருந்தது. ”. "நான் பணியில் சேர்ந்த தருணம், அது மனித வளத்தையும் பொருட்களின் தேவையையும் வளர்ப்பதற்கான விஷயமாக உணர்ந்தேன்" என்று லைலா கூறினார்.

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பாக, 11 லைன்மேன்கள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஏனெனில், புதிதாக சேர்ந்தவர்களுக்கு புதிய பகுதி மற்றும் விநியோகம் தொடர்பாக குறைந்தளவே தெரிந்திருப்பார்கள் என்பதால் தான்.

“சீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தற்காலிக மின் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்; அதன் மூலம் சீரமைப்பு, இணைப்பு பணிகளை விரைவாக செய்ய முடியும் என்று தெரிவித்திருந்தோம்” என்று அவர் கூறினார். இதையேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மின்வாரியம் உடனடியாக உத்தரவுகளை பிறப்பித்து பணி தொடர உதவியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எர்ணாகுளம் மாவட்டம், ஆலங்காட்டிலும் கூட, தங்களுக்கு பரிச்சயமான பகுதிகளில் துரிதமாக சீரமைப்புகள் மேற்கொள்வதை உறுதி செய்ய ஏதுவாக, பணியாளர்களும், கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

2018 ஆகஸ்ட் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட செங்கனூர் துணை மின் நிலையத்தில் போடப்பட்டுள்ள பழுதடைந்த மின் உபகரணங்கள்.

செங்கனூர் மற்றும் ஆலங்காடு பகுதிகளில் சில இடங்களில் மின் கம்பிகளும், உபகரணங்களும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கிக் கிடந்தன. அவற்றுள் தண்ணீர் புகுந்து துர்நாற்றம் வீசிய நிலை இருந்தது. கே.எஸ்.இ.பி.யின் அனுபவம் வாய்ந்த எட்டு குழுக்கள் தண்ணீரில் கம்பங்கள், வயர்கள் மூழ்கிய பகுதிகளுக்கு சென்று, சீரமைத்து நிறுவும் பணிகளை கவனித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்படாத மின்மாற்றிகளில் ஆயில் மாற்றப்பட்டு, பியூஸ் போடப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பழுதடைந்த 16,158 மின்மாற்றிகளில், 99% செப்டம்பர் 2018, 3ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டதாக, கேரள மின்வாரிய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

”வெள்ளத்தால் 33 கே.வி. துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்ட போதும், எங்கள் பணியாளர்கள், தன்னார்வலர்களின் அயராத உழைப்பால், மின் வினியோகத்தை சில நாட்களிலேயே திரும்ப கொண்டு வர முடிந்தது” என்று ஆலங்காடு பிரிவு உதவி பொறியாளர் அனில் குமார் கூறினார்.

வீடுகள் பாதிக்கப்பட்டிருந்ததால் மின் வினியோகம் வழங்க இயலாத நிலை இருந்தது. எனினும் பாதுகாப்பு வசதிகளோடு தற்காலிகமாக, எளிமையான மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் அதிர்ச்சிகளை தடுக்கக்கூடிய சாதனங்கள், மோட்டர்களை இயக்குவதற்கு பவர் சாக்கெட், பல்ப் ஹோல்டர் உள்ளிட்டவை என, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 700 உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வீடுகளுக்கு பாதுகாப்பான மின்சாரம் வழங்கும் பணியில், தனியார் அமைப்பான கேரள மின்சார வயர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் கூட்டமைப்பின் பணி மிக இன்றியமையாத ஒன்றாக இருந்தது.

”தினமும் 3-4 பேர் கொண்ட குழு, 150 வீடுகள் வீதம், வீட்டு உரிமையாளர்கள் முன்னிலையில் மின்பழுது மற்றும் இணைப்பு வழங்குவதற்கான பரிசோதனைகளை நடத்தி சீரமைத்தது” என்று கூட்டமைப்பின் செங்கனூர் உறுப்பினரான ஜோஸ் டேனியல் தெவித்தார்.

தண்ணீரும், சேறும் சகதியுமாய் சூழப்பட்ட வீடுகளை, உதவிக்காக முதலில் சென்றடைந்த இவர்களின் பணி, நள்ளிரவு வரை நீடித்தது.

ஜோஸ் டேனியல் உள்ளிட்ட வயர்மேன் குழுக்கள் நாளொன்றுக்கு 150 வீடுகள் வீதம் ஆய்வு செய்த பிறகே, மின்வினியோகம் தரப்பட்டது. இக்குழுவினர் வெள்ளம், சகதிகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்

மழைக்காலங்களில் வெள்ளத்தை சந்திக்கும் குட்டநாடு போன்ற தாழ்வான பகுதிகளில், மின் வினியோகத்தை சீரமைப்பது என்பது கடும் சவாலான ஒன்றாக இருந்தது.

கடல் மட்டத்தைவிட தாழ்வாக உள்ள குட்டநாட்டில் மின் சீரமைப்பு

குட்டநாட்டில் கைனகரி மின்வாரிய அலுவலகத்தில், இரண்டு மீட்டர் உயரம் வரை வெள்ளம் எட்டிய நிலையில், கோப்புகளும், ஆவணங்களும், மீட்டர்களும் தண்ணீரில் மூழ்கின. கடல் மட்டத்தில் இருந்து சராசரி ஒரு மீட்டர் உயரம் என்று இருக்கையில் இது இந்தியாவின் மிக குறைந்த பகுதியாக உள்ளது.

மழைக்காலங்கள் வெள்ளம் தேங்கும் குட்டநாட்டில் வடிகால் பயன்படுத்தப்படுகிறது; எனினும் இந்த வெள்ளம் எதிர்பாராதது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கடந்த 2018 ஜூலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட கைனகரி உட்பட ஆழப்புழையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. எனினும் பாதிப்புகள் இவ்வளவு கடுமையாக இருந்ததில்லை என்று, கைனகரி பிரிவு உதவி பொறியாளர் என்.கே. ஆனந்தன் தெரிவித்தார். ”ஜூலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அலுவலகத்தின் உள்ளே ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்தது; ஆனால், ஆகஸ்ட் மாத வெள்ளத்தின் போது இது, ஐந்து அடி உயரத்திற்கு தண்ணீர் வந்து கடும் சேதத்திற்கு வித்திட்டது” என்று அவர் மேலும் கூறினார்.

கைனகரியில் உள்ள மின்வாரிய அலுவலகம் வெள்ளத்தில் மூழ்கியதால், 4 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.

குட்டநாட்டில் உள்ள 98 மின்மாற்றிகளில் 6 நீரில் மூழ்கின; எஞ்சியவற்றில் பல பாதிப்படைந்திருந்தன. வெள்ளம் புகுந்ததால் இங்குள்ள துணைமின் நிலையம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.

தண்ணீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்ததால், அபாயத்தை தடுக்க மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் படகில் சென்று வீடுகளின் மின் இணைப்பை துண்டித்தனர். ”இப்பகுதியில் இருந்த பெரும்பாலானோரும் வெளியேற்றப்பட்ட நிலையில், வெளிச்சமற்ற இரவில் ரோந்து சென்று பணி மேற்கொள்வது கடினமாக இருந்தது” என்று கைனகரி பகுதியை சேர்ந்தவரும் கே.எஸ்.இ.பி.யின் 24 ஆண்டுகால ஒப்ந்ததாரருமான அசோக்குமார் கூறினார். படகிற்கும், மின்சார ஒயர்களுக்கும் இடையே மிக தாழ்வாக இருந்தது. சில இடங்களில் படகில் இருந்தவாரே மின் வயர்களை சரி செய்தோம்” என்றார் அவர்.

தாழ்வான குட்டநாடு பகுதியில் மின்வினியோகத்தை துரிதமாக சீரமைத்த கைனகரி மின்வாரிய அலுவலக ஊழியர்கள்.

இந்தியா ஸ்பெண்ட் சென்றிருந்த மாவட்டங்களில், அப்பகுதிக்கு புதியவர்களாக இருந்த மீட்புக்குழுவினர் மின்வழித்தடங்கள், பாதைகளை அமைத்திருந்தனர்.

புதிய மீட்புக்குழுவினருக்கு பாதிக்கப்பட்ட வீடுகளை அடையாளம் கண்டு மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் தன்னார்வலர்கள் உதவியாக இருந்தனர். பாதிக்கப்பட்ட மின் மீட்டர்களை எளிதாக அடையாளம் காண, சேதமடைந்த மீட்டருக்கு சிவப்பு, சேதமடையாததற்கு பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. குட்டநாட்டில் உள்ள 58 கி.மீ. தொலைவுள்ள 11 கி.வா. மின் வழித்தடம், 86% நெல் வயல்களை கொண்டவை. கடல் மட்டத்தில் இருந்து சிறிது உயரமே கொண்ட இப்பகுதிகளில், ஐந்தே நாட்களில் மின் வினியோகம் சீரானது.

வெள்ளத்தால் மின்கட்டமைப்பு சேதமடைந்த வீடுகளில், தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.

“வெள்ளத்தில் மூழ்கிய நெல் வயல்களில் மோட்டார் கொண்டு வழக்கம் போலவே தண்ணீரை வெளியேற்றினோம். ஆனால், இம்முறை நெற்பயிர்கள் சேதமடைந்துவிட்டன” என்று ஆனந்தன் கூறினார். படகுகளின் தேவை குறைந்திருந்ததும், முன்னேற்றத்தின் வேகத்தை குறைந்தன. ”இப்போதும் கூட தண்ணீரால் சூழப்பட்டுள்ள சுமார் 200 வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்க இயலவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பதினம்திட்டா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களிலும் இதேபோன்ற பிரச்சனைகள் எழுந்தன.

ஆட்களையும், பொருட்களையும் அனுப்பிய அண்டை மாநிலங்கள்

“எங்கள் பணியாளர்கள் முன்னுதாரணம் கூறுமளவுக்கு சிறப்பாக பணி புரிந்த போதும், தென் மாநிலங்களில் இருந்து வயர்மேன்கள், எலக்ட்ரீஷியன்கள், பொருட்கள் போன்ற உதவிகள் கிடைக்கப் பெற்றன” என்றார் பிள்ளை. ஆந்திராவில் இருந்து 120 மின்வாரிய ஊழியர்கள் உபகரணங்களோடு வந்து ‘மிஷன் ரீகனெக்ட்’டில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து 20,000 மீட்டர்கள், மின்மாற்றிகள் கே.எஸ்.இ.பி.க்கு வந்து சேர்ந்தன. மின்வினியோகம் மற்றும் வழங்கலை மேம்படுத்தும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டம் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா திட்டங்களில் கேரள அரசு இணைந்திருந்ததாலும், கேரள வாரியத்தின் வசம் மின் மீட்டர்கள், உபகரணங்கள் இருந்தன. அதைக் கொண்டு மின் வினியோகத்தை எளிதாக சீரமைக்க முடிந்தது.

”தமிழக மின்வாரியத்திடம் இருந்து நாங்கள் 125 மின் மாற்றிகளை நாங்கள் பெற்றோம்” என்று, பதினம்திட்டா பகுதி நிர்வாக பொறியாளர் சந்தோஷ். கே இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ”இப்பகுதிகளில் 220 மின் மாற்றிகள் நீரில் மூழ்கி பழுதடைந்துவிட்டன. ஆனால், உடனே கிடைத்ததால் அவற்றை ஐந்தே நாட்களில் மாற்றியோ அல்லது பழுது நீக்கியோ சீரமைக்க முடிந்தது”.

இம்மாவட்டத்தில் மட்டும் உள்கட்டமைப்புகளுக்கான சேதம் ரூ.33 கோடி ஆகும். வெள்ளத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் தவிக்கும் மக்களிடம் இருந்து 2019 ஜனவரி மாதம் வரை மின் கட்டண நிலுவைகளை வசூலிப்பதில்லை என்று, கேரள மாநில மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மூன்று பகுதிகளை கொண்ட இத்தொடரில், இது இரண்டாவதாகும். முதல் கட்டுரையை நீங்கள் இங்கே படிக்கலாம்.

அடுத்து: வெள்ள பாதிப்புக்கு பிந்தைய கேரளாவை நோய்களில் இருந்து எப்படி ஒரு வலுவான சுகாதார கட்டமைப்பு தடுக்கிறது.

(பலியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.