மும்பை: சமீபத்தில் பீகாரின் முசாபர்பூர், அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமானதாக, மூளை அழற்சி பாதிப்பை அனுபவிப்பத நிலையில், மாநில அளவிலான ஊட்டச்சத்து புள்ளிவிவரங்கள் குறித்த நிதி ஆயோக் விவரங்கள் அதையே வெளிப்படுத்துகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்தின் மூன்று குறிகாட்டிகளான வளர்ச்சி குறைபாடு (வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை), மெலிந்து காணப்படுதல் (உயரத்திற்கேற்ப இயல்பான வளர்ச்சி இல்லாதது) மற்றும் எடையின்மை (உயரத்திற்கேற்ற எடை இல்லாதது) ஆகியவற்றில் மாநிலம் அதிக விகிதத்தை கொண்டுள்ளது.

பீகாரில், ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளிலும் 48% வளர்ச்சி குன்றி இருக்கிறார்கள், 21% மெலிந்தும், 44% எடை குறைவாகவும் உள்ளனர். இந்தியாவின் அனைத்து 29 மாநிலங்களிலும், இந்த மூன்று குறைபாடுகளுக்கும் முறையே முதல், முதலாவது, 10ஆவது மற்றும் இரண்டாவது தரவரிசைகளில் மாநிலத்தை நிலைநிறுத்துகிறது; இந்த புள்ளி விவரங்களில் அகில இந்திய சராசரியானது முறையே 38%, 21% மற்றும் 36% ஆக உள்ளது.

பீகார் மாநிலத்திற்கு பிறகு, உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம் 46% ஆகும். தொடர்ந்து ஜார்கண்ட் (45%), மேகாலயா (44%) மற்றும் மத்தியப்பிரதேசம் (42%) உள்ளன.

உடல் மெலிந்த குழந்தைகள் அதிகமுள்ள முதல் ஐந்து மாநிலங்களாக ஜார்க்கண்ட் (29%), குஜராத் (26%), கர்நாடகா (26%), மத்தியப் பிரதேசம் (26%) மற்றும் மகாராஷ்டிரா (26%) இருக்கின்றன.

எடை குறைபாடு உள்ள குழந்தைகளைப் பொருத்தவரை, ஜார்க்கண்ட் (48%) மட்டுமே பீகாரை விட மோசமாக உள்ளது. மத்திய பிரதேசம் (43%), உத்தரபிரதேசம் (40%) மற்றும் குஜராத் (40%) ஆகியவற்றை விட சற்று முன்னால் உள்ளது.

மாநிலங்களின் வருடாந்திர சுகாதார செயல்திறனை அளவிடும் சுகாதார குறியீடுகளில் பீகார் இரண்டாவது மோசமான இடத்தைப் பிடித்தது; ஜூன் 25, 2019 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, அரசின் நிதி ஆயோக், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உலக வங்கி இணைந்து மேற்கொண்டன. இதில் பீகார் பெற்ற மதிப்பீடு 32.1 (2017-18 இல்); இது, அனைத்து மாநிலங்களில் உத்தரபிரதேசத்தை விட (28.6) சிறப்பாக இருந்தது; மற்றும் 2015-16 ஆம் ஆண்டில் அதன் மதிப்பீடு 38.5 இல் இருந்து வீழ்ச்சியைக் குறித்தது; இது உத்தரபிரதேசம் (33.7), ராஜஸ்தான் (36.8) மற்றும் நாகாலாந்து (37.4) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நாட்டின் நான்காவது மோசமான மதிப்பீடாகும்.

பீகாரின் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் - அதாவது பிறந்த ஒரு மாதத்திற்குள்ளாக குழந்தைகள் இறப்பு விகிதம் -அதே காலகட்டத்தில் 1,000 நேரடி பிறப்புகளுக்கு 27 என்ற அளவில் தேக்க நிலையில் இருந்தது; பிறக்கும் போது குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் (2.5 கிலோவிற்கும் குறைவானது) 7.2% இல் இருந்து 9.2% ஆக அதிகரித்தது. ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 நேரடி பிறப்புகளுக்கு 48 என்பது, 43 ஆக சற்று மேம்பட்டது. ஆனால் கருவுறுதல் வீதம் (பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) “உயர்ந்ததாக” இருந்தது; அதே நேரம் 2015 இல் 3.2 ஆக இருந்து 2016 இல் 3.3 ஆக அதிகரித்தது.

இந்தியாவின் சிறந்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாவட்டங்களில் முசாபர்பூர் இல்லை

கடத ஜூன் 26, 2019 நிலவரப்படி மூளை அழற்சி பாதிப்பு காரணமாக 132 குழந்தைகள் இறந்ததாக அறிவிப்பட்ட மாவட்டமான முசாபர்பூர், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள முதன்மையான மாவட்டங்களில் இடம்பெறவில்லை. ஆயினும்கூட, இது, வளர்ச்சி குறைபாட்டில் 48%; உடல் மெலிந்து போகுதலில் 18%; மற்றும் எடை குறைந்த குழந்தைகளில் 42% என - பீகாரின் புள்ளி விவரங்களுடன் (48%, 21% மற்றும் 44%) ஒப்பிடத்தக்கது.

"குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு உணவு, உடல்நலம் மற்றும் கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பராமரிப்பு ஆகியவற்றின் குறைபாடுகளால் ஏற்படுகிறது, குறிப்பாக வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில்," என, முசாபர்பூரின் 2015-16 மாவட்ட ஊட்டச்சத்து விவர அறிக்கை கூறுகிறது. இது, ‘இந்தியாவில் ஊட்டச்சத்து ஆதார இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள போஷன் (POSHAN) ஆராய்ச்சி குழுவால் சேகரிக்கப்பட்டுள்ளது. "வீடு மற்றும் சமூக மட்டத்தில் பெண்களின் நிலை, வீட்டு உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக - பொருளாதார நிலைமைகள் குழந்தைகளின் ஊட்டச்சத்து விளைவுகளுக்கு மேலும் பங்களிக்கின்றன" என்று அது தெரிவிக்கிறது.

கர்ப்பிணிகளில் 29% பேர் மட்டுமே, முதல் மூன்று மாதங்களில் ஒரு மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பு (ANC) வருகை தருவதாக சுயவிவரம் தெரிவிக்கிறது; அவர்களில் 85% பேர் தாய் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு அட்டை வைத்திருந்த போதும், 11% பேர் மட்டுமே குறைந்தது நான்கு முறிய ஏ.என்.சி. வருகைகளை மேற்கொண்டனர்; இது, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எட்டு என்பதைவிட குறைவு. மேலும், 2015-16 ஆம் ஆண்டில், இம்மாவட்டத்தில் 55% குழந்தைகள் மட்டுமே முழு நோய்த்தடுப்பு மருந்துகளை பெற்றனர் (இதில், மாநில சராசரி 90% ஆகும்); இம்மருந்துகள், அரசின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உத்தரவாதம் தருகிறது.

முசாபர்பூரில் சமூக நிலைமைகளுடன் பிணைந்துள்ள ஊட்டச்சத்து குறைபாடு

"முசாபர்பூர் இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான ஒரு முக்கிய இடத்தின் அடையாளமாகும்," என்று தி வயர் அறிக்கை தெரிவிக்கிறது. "இங்கு பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாகத் தோன்றுகிறார்கள்" என்று அது குறிப்பிடுகிறது.

"இங்கு பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டாலும், பிரத்தியேகமான தாய்ப்பால் [மாவட்டத்தில்] அதிகமாக இருந்தாலும், குழந்தை உணவு போன்ற பிற அம்சங்கள் மோசமான நிலையில் உள்ளன மற்றும் குழந்தை பருவ நோய் அதிகமாக உள்ளது" என்று அறிக்கை கூறியது. "ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும் பிற சமூக ஆபத்து காரணிகள் - இளவயது திருமணம், வறுமை, திறந்தவெளியில் மலம் கழித்தல் மற்றும் பல - என்கிறது ஆய்வு. இதை "சரியான புயல்" என்று ஒருவர் அழைக்கக்கூடியதாக உள்ளது" என்று அது கூறுகிறது.

"வறுமை இங்கு ஒரு பெரிய பிரச்சினை," என்று பெயரிட விரும்பாத பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கூறினார். "அரசு திட்டங்கள் ஏராளமாக உள்ளன, ஆனால் செயல்படுத்துவது ஒரு சிக்கல். வீட்டுக்கு யாரும் வருவதில்லை மற்றும் எல்.பி.டபிள்யூ - LBW [குறைந்த பிறப்பு எடை] பதிவுகள் தவறாக பதிவு செய்யப்படுகின்றன. பெண்கள் இரத்த சோகை மற்றும் பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தடுப்பு சிகிச்சையின் தரம் மிகவும் மோசமானது. அது தவிர, முசாபர்பூரை இது [மூளை அழற்சி] தாக்கியதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை; இது பெகுசாரை [பீகாரின் மற்றொரு மாவட்டம்] இல் மிகவும் வழக்கமானதாகும். விழிப்புணர்வு இல்லாதது மற்றொரு முக்கியமான கவலை தரும் அம்சம்” என்றார்.

அரசு திட்டங்களில் தோல்வி

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 3,801 அங்கன்வாடிகள் - குழந்தை பராமரிப்பு மையங்கள் - முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ளதாக, ஐசிடிஎஸ் இணையதளத்தில் மாவட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

"அங்கன்வாடிகள் ஒரு சமூக மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு வலையாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கக்கூடும்" என்று தி வயர் செய்தி அறிக்கை கூறியது. "பீகாரில் துணை ஊட்டச்சத்து திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு சவால்களால் சிக்கியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக, அதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது நல்லது" என்று அது கூறியுள்ளது.

"அங்கன்வாடி மையங்களால் அவற்றின் செயல்பாடுகளை முழுமையாக வழங்க முடியவில்லை," என்று அந்த தொழிலாளி கூறினார். "அவர்களுக்கு அதிக திறன் தேவை, பயிற்சியின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும், மற்றும் தொழிலாளர்கள் - பெரும்பாலும் தன்னார்வ - உந்துதல் தேவை. காகித வடிவில் மட்டுமே அங்கன்வாடி மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன; உண்மையில், அவற்றின் செயல்பாடு மோசம் " என்றார் அவர்.

"எல்லோருமே அரசை குற்றம் சாட்டுகிறார்கள்," என்று டாக்டர்ஸ் பார் யு என்ற மனிதாபிமான அமைப்பின் நிறுவனர் ரவிகாந்த் சிங் கூறினார். "ஐசிடிஎஸ் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளின் அடிப்படையில் இது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்” என்றார் அவர்.

சில அங்கன்வாடிக்கள் “மிகச் சிறப்பாக” செயல்பட்டு வருவதாக, பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு சமூக சேவகர் தெரிவித்தார். "நாம் குடும்பம் போன்ற முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் பார்க்க வேண்டும் - ஐசிடிஎஸ் ஒரு பங்குதாரர் மட்டுமே, மேலும் அதனால் துணை உதவிகளை மட்டுமே வழங்க முடியும்; குடும்பம் தான் உணவு மற்றும் ஊட்டச்சத்தை வழங்குகிறது. பீகார் மாநிலமானது விவசாயத் துறையை வாழ்வாதாரமாக சார்ந்த கிராமப்புறங்களை கொண்ட மாநிலமாகும்” என்று அவர் கூறினார்.

பீகாரின் மோசமான ஐசிடிஎஸ் உள்கட்டமைப்பு குறித்து, மார்ச் 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. அதில், "அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை, குடிநீர், சமையலறை, பாத்திரங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், அது பயனாளிகளுக்கு வழங்கப்படும் தரமான சேவைகளில் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது" என்று சுட்டிக் காட்டியிருந்தது. மாநிலத்தில், 2014ஆம் ஆண்டின்படி, ஒரு அங்கன்வாடி மையமானது 193 குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்தை அளித்து வந்தது; இது, ஒரு மையத்திற்கு 68 குழந்தைகள் என்ற தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம்.

“அதிக கருவுறுதல் விகிதம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக ஐசிடிஎஸ் மையங்கள் தேவைப்படலாம்; மேலும் அனைத்து சேவைகளையும் முழு அளவிலான வழங்குவதை உறுதி செய்வதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது” என, மார்ச் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை பரிந்துரை செய்திருந்தது.

(சஹா, புனேவின் சிம்பியோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் எம்.எஸ்.சி மாணவர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.